சென்னை: தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. (நேற்று காலை 8.30 )கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2 cm மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சியில் 2 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் , சின்கோனா, வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டத்தில் பொன்னை அணை போன்ற இடங்களில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 106.7 டிகிரி வெயில் காணப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலையாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருகிற 26 ஆம் தேதி வரையில் மத்திய வங்கக் கடல் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று ஏற்படும் என்றும், சூறாவளி காற்று ஆனது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று கூறப்படுகிறது.
தென்மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், இப்பதிகளுக்கு மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.