சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, ‘அய்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று (ஜூலை 25, 2025), மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி, அவரது தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
“அய்யா” திரைப்படம் மருத்துவர் ராமதாஸின் ஆரம்பகால வாழ்க்கை, மருத்துவப் படிப்பை முடித்து ஒரு மருத்துவராக அவர் ஆற்றிய சமூகப் பணிகள், பின்னர் 1980-களில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக அவர் நடத்திய தொடர் போராட்டங்கள், அதன் விளைவாக ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது வரையிலான அவரது பயணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இட ஒதுக்கீடு போராட்ட வரலாற்றில் ராமதாஸின் பங்கு மிக முக்கியமானது என்பதால், அந்த நிகழ்வுகள் படத்தில் முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சேரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் தொடங்குகிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை.. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காகத் தயாராகிறது. விடியல் ஆரம்பம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலின்படி, மருத்துவர் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அண்மைய தகவல்கள், சரத்குமாருக்கு பதிலாக நடிகர் மம்முட்டியிடம் இயக்குநர் சேரன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் கூறுகின்றன. படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பது, சினிமா மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.