சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் நகர வளர்ச்சியின் பிரதான அடையாளமாகத் திகழ்கிறது. ஆனால், அதன் ஒரு பகுதியாக ராமாபுரம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிகழ்ந்த விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கேள்விகளையும் எழுத்தி உள்ளது. மெட்ரோ மேம்பாலத்திற்கான தூண்களில் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. தூணின் மேல் பகுதியிலிருந்து இரும்பு கட்டுமானம் வெடித்து விழுந்ததில், அருகே சென்ற ரமேஷ் என்ற பொதுமகன் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தும் உள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், வெல்டிங் பகுதியில் ஏற்பட்ட தவறான பணியினாலே இத்தகைய விபத்து நிகழ்ந்தது என உறுதியாகி உள்ளது. இந்நிலையிலே, மேம்பாலத் தூணை கட்டிய ஒப்பந்த நிறுவனம் L&T (Larsen & Toubro) மீது ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை மற்றும் தரநிலைகளை மீறியது என மெட்ரோ நிர்வாகம் கண்டறிந்த நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு சார்ந்த நடைமுறைகளில் கவனக்குறைவாக இருந்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ திட்ட இயக்குநர் தலைமையிலான விசாரணை குழு, பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து, கட்டுமான முறைகள், பாதுகாப்பு சோதனைகள், தரநிலை சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ பயணிகளிடமும் நம்பிக்கை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நகர வளர்ச்சித் திட்டங்களில் பாதுகாப்பு முதன்மை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பெருமளவில் எதிர்வினைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முடிவில், இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து பொது திட்டங்களிலும் பாதுகாப்பு, தரம், பொறுப்புணர்வு ஆகியவை கட்டாயமாக வலியுறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன.