தமிழக உணவு பாதுகாப்பு துறை, ரேஷன் கார்டு அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்டாயமாக கைரேகை வைக்குமாறு கோரி இருந்தது. குறிப்பிட்ட சதவீத மக்கள் இதை பூர்த்தி செய்தும், 2.23 கோடி மக்கள் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், இது சாத்தியப்படவில்லை என்ற காரணத்தினால் முகாம் அமைத்து இதனை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் 34,793 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 7,00,51,954 பயனர்கள் இதுவரை உள்ளனர். பல குடும்பங்களின் வாழ்வியல் இதை மையமாக வைத்து தான் செயல்படுகின்றன.
ஏற்கனவே, ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணியானது 6,96,47,407 பயனர்களுக்கு வெற்றி கரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை திட்டத்தில் ஒன்றான அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி பயனர்கள் பயன்பெறுகின்றன. மேலும் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அட்டைதாரர் எந்த ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் பொருட்களின் அளவு குறைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பொது நியாய விலை கடை ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றதாகவும், இதற்கு முகாம்கள் இட்டு இதை முடிப்பது குறித்து முடிவு எடுக்கவும் கலந்தாலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த மாவட்ட ரேஷன் கடை பயனாளர்களை E-KYC முடிக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ரேஷன் கடை ஊழியர்களை வைத்து, வருகின்ற 14, 15, 21, 22 ஆகிய நாட்களில் முகாம்கள் இட்டும், மற்ற நாட்களில் பயனர்களை அணுகியும் இதை முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.