சட்டமன்றத் தேர்தலின் கட்டுப்பாடுகள்!! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களை கவரும் விதமான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் மறைமுக சலுகைகளை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், சென்னை மாவட்டத்தில் வங்கி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் நகை அடகு கடைகள், திருமண மண்டபங்கள், விடுதிகள் மீதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அடகு வைத்த நகைகளை அரசியல் நோக்கில் திருப்பிக் கொடுக்க உதவினால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு டோக்கன் அல்லது அடையாள வில்லைகள் மூலம் நகைகள் வழங்கும் முயற்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அதிக அளவில் அடகு நகைகள் மீட்கப்பட முயற்சி நடந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் வெளியூரிலிருந்து குழுவாக வந்து தங்க அனுமதி வழங்கக் கூடாது என்றும், அரசியல் தொடர்பான கூட்டங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டால் அது குறித்து தேர்தல் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்குபவர்களிடம் புகைப்பட அடையாள அட்டை நகல் பெற்ற பிறகே அறைகள் வழங்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் செலவினங்களிலும் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவிட முடியும், அவர்களின் செலவுகளை தனிப்பட்ட கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றன. தேர்தல் முறைகேடுகளை முற்றிலும் தடுக்க இந்த நடவடிக்கைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram