சென்னையில் இன்று ஜூலை 1ம் தேதி முதல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டின் மூலம் பயணிக்க முடியும் என்ற புதிய திட்டம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் பயணிகள் எவற்றில் டிக்கெட் விலை குறைவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியதில்லை. ஒரே ஒரு டிக்கெட்டில் பேருந்து, ரயில் என நமக்கு வசதியாக எது இருக்கிறதோ அதில் பயணிக்க முடியும். இந்த மாற்றம் பொதுப் போக்குவரத்தை இன்னும் எளிமையானதாக மாற்றும்.
இந்த புதிய திட்டத்திற்காக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த செயலி மூலம் பயணிகள் தங்கள் பயணத்தின் தொடக்கதினையும், முடிவினையும் தேர்வு செய்யலாம். இந்த செயலி, குறைந்த நேரமும், குறைந்த செலவும் உள்ள அனைத்து சாத்தியமான போக்குவரத்து வழிகளையும் காட்டும். உதாரணமாக, கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை செல்ல வேண்டுமெனில் பேருந்து, மெட்ரோ, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து இணைப்பு வழிகளையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், செயலியில் real-time updates வழங்கப்படும். பயணிகள் நேரடி தகவல்களுடன் எந்த போக்குவரத்தில் எப்போது பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே சிங்காரச் சென்னை பயண அட்டை என்ற பெயரில் ஒரு திட்டம் நடைமுறையில் இருந்தாலும், தற்போது முழுமையான ஒருங்கிணைந்த டிஜிட்டல் பயணமுறை உருவாக்கப்படுகிறது. QR கோடு வழியாக டிக்கெட் வழங்கப்படும், இந்த செயலி ஜூலை இறுதியில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சென்னை நகர போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.