மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலைய வைத்துள்ளார்.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும், சற்றும் பதற்றமடையாத சஞ்சு சாம்சன், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய சஞ்சு, வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் (50 Runs) பூர்த்தி செய்தார்.
முக்கியமான ஒரு அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்துள்ள இந்த அரைசதம், இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்துள்ளதோடு, இமாலய இலக்கை எட்டவும் வழிவகை செய்துள்ளது. இஷான் கிஷனுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்த சஞ்சு, இங்கிலாந்து ஸ்பின்னர்களைக் கூட விட்டுவைக்கவில்லை.
இவரது அதிரடியால் இந்தியா 10 ஓவர் முடிவிலேயே 100 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது. சஞ்சு சாம்சனின் இந்த ‘மாஸ்’ இன்னிங்ஸை வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


