மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவின் முக்கிய நகரமான அல்-கார்ஜ் (Al-Kharj) மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் சவுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியக் குடும்பங்களிடையே பெரும் அச்சம் நிலவியது.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “சவுதியில் ஈரான் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், அல்-கார்ஜ் நகரில் நடந்த இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்தியருக்குத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்தவுடன் இந்தியத் தூதரக அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, காயமடைந்த இந்தியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் இந்தியத் தூதரகம் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதியில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்குமாறும், அவசரத் தேவைகளுக்குத் தூதரகத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹோர்மோஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இந்தியர்களை மீட்கும் தேவை ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





