தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் நிலையில், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிரசாரங்களில் அனல் பறக்கும் கருத்துகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்களைக் கடுமையாகச் சாடினார். “தன்னையும் தான் சார்ந்த மக்களையும் நம்பாத ஒருவன் தான், பயத்தினால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான்.
நான் ‘மாஸ்’, நான் ‘பிளாஸ்ட்’, நான் ‘உச்சம்’ என்றெல்லாம் சினிமாவில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? நிஜ அரசியலில் ஒரு பெரிய தலைவன் என்றால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஒரே ஒரு தொகுதியில் நின்று ஜெயிக்க வேண்டும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்களிடம் ‘தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்’ என்று உபதேசம் செய்துவிட்டு, தங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் இரண்டு தொகுதிகளில் நிற்பது என்ன மாதிரியான தலைமை? நான் கடந்த தேர்தல்களில் இரண்டு முறை தோற்றாலும், இந்த முறையும் அதே உறுதியுடன் ஒரே தொகுதியில் தான் நிற்கிறேன். எனது தம்பிகள் மற்றும் பிள்ளைகள் கூட வேறு பாதுகாப்பான தொகுதிக்கு மாறச் சொன்னார்கள், ஆனால் நான் கேட்கவில்லை. களம் எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பவன் தான் தமிழன்” எனத் தனது பாணியில் பஞ்ச் வசனங்களைப் பேசினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற முக்கியக் கட்சித் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் களம் இறங்கத் தயாராகி வரும் சூழலில், சீமானின் இந்தத் தாக்குதல் தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் விஜய்யை ஆதரித்த சீமான், தேர்தல் களத்தில் அவருக்கு எதிராக எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடு, வரும் நாட்களில் வாதப் பிரதிவாதங்களை இன்னும் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது.




