திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அண்மையில், “உயிரிழக்கும் தருவாயில் இருந்தபோது கருணாநிதியின் கைகளைப் பிடித்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு காமராஜர் கூறினார்” என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “காமராஜர் உயிரோடு இல்லை என்பதால் திருச்சி சிவா எதை, எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்” என்று கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், திருச்சி சிவாவின் பேச்சு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில், “திருச்சி சிவா இப்படி ஒரு கருத்தைச் சொல்வது நகைப்புக்குரியது. காமராஜர் எப்போது மறைந்தார், கருணாநிதி எப்போது முதல்வரானார் என்பதெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரியும். காமராஜர் உயிருடன் இல்லாதபோது, எப்படி கருணாநிதியின் கைகளைப் பிடித்து அவ்வாறு கூறியிருக்க முடியும்? காமராஜர் உயிரோடு இல்லை என்பதால், இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று திருச்சி சிவா நினைத்துக் கொண்டிருக்கிறார். இது வரலாற்றைத் திரிக்கும் செயல்” என்று சாடினார்.
மேலும், “இப்படிப்பட்ட ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி மக்களை ஏமாற்றலாம் என்று திமுக நினைக்கிறது. ஆனால், தமிழக மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்” என்றும் சீமான் தெரிவித்தார். திருச்சி சிவாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீமானின் இந்த பதிலடி மேலும் அனலைக் கிளப்பியுள்ளது.