கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் ரோட்டு மருவாய் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து 6 மாணவிகளை ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் உடனடியாக குறிஞ்சிப்பாடியில் உள்ள மற்றொரு அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெயராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் துறை ரீதியாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜெயராஜ் பணி இடை நீக்கம் செய்து உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.