கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவமாக மாறியுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் மூச்சு திணறல் காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போது கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கரூர் சென்று காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அதேபோல் சீமான், பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
விசாரணை தீவிரம்
நிகழ்வுக்கான அனுமதி 10,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், 25,000-க்கு மேற்பட்டோர் திரண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அனுமதி மீறல், பாதுகாப்பு குறைபாடு, பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தவெக அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்வில் போதிய பாதுகாப்பு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாததே பெரும் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இன்று வெளியிட்ட அறிக்கையில்,
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்,”
என்று அறிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நாளை முழுநேர கடையடைப்பு நடைமுறைக்கு வருகிறது.
இயங்காத சேவைகள்:
மளிகை கடைகள்
டெக்ஸ்டைல், ரெடிமேடு கடைகள்
சூப்பர் மார்க்கெட்டுகள் / ஹைப்பர் மார்க்கெட்டுகள்
மொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர் கடைகள்
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்
இயங்கும் சேவைகள்:
மருந்தகங்கள்
மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகள்
பால் விநியோகம் மற்றும் பால் பார் கடைகள்
பெட்ரோல் பங்குகள்
பொது போக்குவரத்து (பேருந்து, ரெயில், ஆட்டோ, டாக்சி)
கரூரில் நடந்த இக்கூட்ட நெரிசல், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக மாறக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த துயரச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


