தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது செல்வாக்கு மிக்கப் பகுதிகளான வட தமிழகத்தில் வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக, பாமகவின் மிக முக்கியமான கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி தொகுதியில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் முதல்முறையாக நேரடியாகக் களம் கண்ட சௌமியா அன்புமணி, 4,11,367 வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரிடம் சுமார் 21,300 வாக்குகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாலும், தொகுதியில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது.
தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அந்தத் தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தருமபுரியைத் தனது அரசியல் தளமாக நிலைநிறுத்திக் கொள்ளவும் சௌமியா அன்புமணி மீண்டும் களம் இறங்குகிறார். மக்களவைத் தேர்தலின் போது இவருக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் வன்னியர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் பாமகவின் வியூகம் இந்த முறை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாகத் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களை முன்வைத்து அவர் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், சௌமியா அன்புமணியின் வருகை தருமபுரி தொகுதியைத் தமிழகத்தின் ‘விஐபி’ தொகுதியாக மாற்றியுள்ளது. திமுக மீண்டும் அந்தத் தொகுதியைத் தக்கவைக்குமா அல்லது சௌமியா அன்புமணி முதல்முறை சட்டப்பேரவைக்குள் நுழைவாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.




