ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் குருகிராம் பகுதியில் துரியோதன ராவ் (28) மற்றும் பார்வதி (22) ஆகியோர் தம்பதியராக வசித்து வந்தனர். துரியோதன ராவ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பார்வதி ஒரு கால் சென்டரில் வேலை பார்த்துவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, இரவு உணவை முடித்த பின் இருவரும் குளிர்ந்த காற்றை அனுபவிக்க வீட்டின் நான்காம் மாடியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றனர். இரவு 10:30 மணியளவில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பார்வதி மொட்டை மாடி சுவரின் விளிம்பில் அமர்ந்து, துரியோதனிடம், “நான் கீழே விழுந்தால் நீ என்னை காப்பாற்றுவாயா?” என்று கேள்வி எழுப்பினாராம். இதைக் கேட்டு துரியோதன ராவ் பதில் சொல்லிக்கொண்டே அவளை கீழே இறக்க முயன்றுள்ளார். அப்போது பார்வதி தவறி நிலை தடுமாறி விழுந்துள்ளார்.
துரியோதன ராவ் அவளைக் காப்பாற்ற முற்பட்டு கையில் பிடித்து மேலே இழுக்க முயன்றும், கையில் இருந்து பார்வதி தவறி கட்டிடத்தின் கீழே விழுந்துவிட்டார். உடனடியாக பார்வதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பலத்த உள் காயங்களால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், துரியோதன ராவோடு நடந்த விசாரணையில் அவர் மனைவியை காப்பாற்ற முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. துரியோதனின் உடலிலும் காயங்கள் இருந்ததால் அவரது கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வதியின் குடும்பத்தினர், தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் போலீசுக்கு தெரிவித்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் அந்த பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.