திருமாவளவன் மனதை கரைத்த ஸ்டாலின்!! எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு??

தொடங்கவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறி இன்று முடிவுக்கு வந்தது. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விசிக, இடையே இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, விசிகவிற்கு மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர். ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் 2 பொதுத்தொகுதிகளும், 6 தனித்தொகுதிகளும் அடங்கும். முன்னதாக, விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கோரி வலியுறுத்தி வந்தது. இதற்காக திருமாவளவன் நேரடியாக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் அதிக தொகுதிகள் வழங்க இயலாது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதியாக 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து சமரசம் காணப்பட்டது.

இதற்கு முன் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகள் மற்றும் எதிர்காலத்தில் ராஜ்யசபா இடம் வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த சட்டசபை தேர்தலில் விசிகவிற்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், விசிக தனது தாக்கத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது.

இதன்மூலம், திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகள் பெற்ற கட்சியாக விசிக திகழ்கிறது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram