கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 41 பேரின் உயிரை பறித்த பெரும் துயரமாக மாறியது. இந்த சம்பவத்தில் 39 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; மேலும் 111 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீடியோ செய்தியின்மூலம் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கரூர் சம்பவம் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் பரவுகின்றன. எந்த அரசியல் தலைவரும் மக்களின் உயிரிழப்பை விரும்பமாட்டார்கள். உண்மையை வெளிக்கொணரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும், என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சில சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்கள், சினிமா விமர்சகர்கள் மற்றும் அரசியல் பக்கங்கள் கரூர் விபத்துக்குப் பின்னால் அரசு அலட்சியம் இருப்பதாக குற்றச்சாட்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து, பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவோருக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களின் கூற்றுப்படி, ஸ்டாலினின் இந்த எச்சரிக்கை, “சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் தொடக்கமாகும்” என கூறப்படுகிறது.


