திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரவில், பரத் தனது குடும்பத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்த கடையில் இருந்து வாங்கிய சிக்கன் ஃப்ரைட் ரைஸ் மற்றும் வீட்டில் செய்த தோசையை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு பரத் உடலில் சிறிது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. நள்ளிரவில் வாந்தி எடுத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். பதறிய பெற்றோர் உடனே பரத்தை பெரும்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமையா அல்லது உணவில் ஏதேனும் ரசாயனங்கள் கலந்திருப்பதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சிக்கன் ஃப்ரைட் ரைஸில் ஏதேனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறதா அல்லது பழைய சிக்கன் உபயோகிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து, உணவு மாதிரிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பரத்தின் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி, அப்பகுதி மக்களிடம் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழ வைத்துள்ளது.