புது டெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 63 மாவட்டங்களில் 50% அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது போன்ற தகவல்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஜூன் மாதத்திற்கான ஊட்டச்சத்து கண்காணிப்பு தரவுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தரவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 63 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர்.
அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் அதிகமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகள் நீண்ட காலத்திற்கு போதுமான ஊட்டச்சத்து பெறாதது இந்த வளர்ச்சி குன்றியதற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் 63 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட் பீகார் மற்றும் அசாம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்து நிலையில் உள்ளன. அதிகளவிலான வளர்ச்சி குன்றிய மாவட்டங்களில் மராட்டியத்தின் நந்தூபார் (68.12%), ஜார்க்கண்ட்டில் மேற்கு சிங்பூம் (66.27%), உத்திரபிரதேசத்தின் சித்ராகூட்(59.48%), மத்திய பிரதேசத்தில் சிவபுரி (58.20%) மற்றும் அசாமின் போங்கைகான் (54. 76%) ஆகிய மாவட்டங்கள் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளை அதிக அளவில் கொண்டுள்ளன.
அங்கன்வாடிகளில் 0 முதல் 6 வயதுடைய 8.19 கோடி குழந்தைகளில் 35.91% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றன. மேலும், 16.5% குழந்தைகள் எடை குறைவாக காணப்படுகின்றனர் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தாக்கலில் கூறப்பட்டுள்ளது.