சென்னை: இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா மற்றும் அவரது குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இன்று பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்கள் புறப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், இன்று மாலை இந்திய நேரப்படி சுமார் 3 மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயண விவரம்:
இந்திய விமானப்படை விமானியான சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகிய 4 பேர் கொண்ட குழு, கடந்த மாதம் ஜூன் 26 அன்று அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
இதன் மூலம் சுபான்சு சுக்லா, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த சுபான்சு சுக்லா, தனக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்குத் திரும்புதல்:
சுபான்சு சுக்லா குழுவினர் நேற்று பிற்பகல் (திங்கட்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பும் நிகழ்வைத் தொடங்கினர். டிராகன் விண்கலம், நேற்று மாலை இந்திய நேரப்படி 4.45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியில் மிதந்தபடி பாதுகாப்பாக விலகியது. இந்த விண்கலம் பூமியை நோக்கி 22.5 மணி நேரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் இன்று மாலை 3.01 மணி அளவில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் கடலில் விழும் நிகழ்வு “ஸ்ப்ளாஷ் டவுன்” எனப்படும். வெற்றிகரமாக ஸ்ப்ளாஷ் டவுன் முடிந்ததும் படகு மூலம் விண்கலம் மீட்கப்பட்டு வீரர்கள் வெளியே அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.