புதுடெல்லியில் உள்ள ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதுடைய பங்கஜ் என்ற இளைஞர், வழக்கம்போல் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்யத் தொடங்கினார். அவர் காலையில் 10 மணியளவில் ஜிம்மிற்கு வந்து, ஆரம்பமாக ஒரு கப் கருப்பு காபி குடித்து விட்டு, தோள்களுக்கு பயிற்சி அளிக்கும் மெஷினை பயன்படுத்தினார். இதன் பிறகு, 10:20 மணிக்கு ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு எனப்படும் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால், பயிற்சி தொடங்கிய இரண்டே நிமிடங்களில் அவர் திடீரென தரையில் விழுந்து விட்டார். அந்த சத்தத்தை கேட்டு மற்றொரு பயிற்சியாளர் பங்கஜினைப் பார்க்க ஓடி வந்தார். தண்ணீர் தெளித்து, அவரை சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றாலும், அது நடக்கவில்லை. உடனடியாக தனியார் மருத்துவமனையிலிருந்து மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் அழைக்கப்பட்டன. ஆனால், மருத்துவர்கள் வரும் நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டார்.
ஜிம்மில் உள்ள சிசிடிவி காட்சிகள் இந்த சம்பவத்தை முழுமையாக பதிவு செய்துள்ளன. பங்கஜின் பயிற்சியாளரான புனீத், அவர் எப்போதும் கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்பவர், அதிக உடற்பயிற்சியில் ஈடுபட்டு நான் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார். தொடக்க மருத்துவ ஆய்வில் பங்கஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, வழக்கமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.