ரஜினி பட பிஜிஎம் பயன்படுத்திய சிஎஸ்கேக்கு சட்ட சிக்கல் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிர்வாகம் வரவிருக்கும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு அணிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக புரமோஷன் செய்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது சட்டப்பிரச்சனையை சந்தித்துள்ளது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் ,கூலி மற்றும் ஜெயிலர் 2 திரைப்படங்களின் பாடல்கள், பின்னணி இசைகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த திரைப்படங்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானதால், அவற்றின் காப்புரிமை சன் குழுமத்திற்கே சொந்தமானது.இதனால் உரிய அனுமதி பெறாமல் இசைகளை பயன்படுத்தியதாக கூறி சிஎஸ்கே நிர்வாகத்திற்கு முதலில் இ-மெயில் மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. பின்னர் விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றது. வழக்கு விசாரணையின் போது சன் குழுமம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எச்சரிக்கை அனுப்பிய பிறகு சிஎஸ்கே அந்த பாடல்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது. இனி காப்புரிமை மீறல் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சிஎஸ்கே தரப்பு, சர்ச்சைக்குரிய பாடல்கள் ஏற்கனவே புரமோ வீடியோக்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், இனி உரிய அனுமதி இல்லாமல் எந்த திரைப்பட பாடல்களையும் பயன்படுத்தமாட்டோம் என்றும் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த உறுதியை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், MS தோனி மற்றும் ரஜினி இணைந்த எடிட் வீடியோக்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் சூழலில், சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அதே பாணியில் சென்றது தற்போது எதிர்பாராத சட்ட சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் இடையே ஏமாற்றமும் பேசுபொருளாகியுள்ளது.


