தூத்துக்குடி மாவட்டம் விளத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியில் அண்மையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இது குறித்து நடிகர் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி எஸ்.வி.சேகர் பேசியுள்ள கருத்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அவரது பேச்சில், “அந்தப் பெண் ஏன் புதருக்குப் பின்னால் போய் மறைந்து நிற்க வேண்டும்? எல்லா வேலையையும் போலீஸ் எப்படிச் செய்ய முடியும்? போலீஸ் தெருவிளக்கு போடுவார்களா அல்லது புதிருக்கு லைட் போடுவார்களா?” என மனிதாபிமானமற்ற முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், குற்றத்தைச் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் விதமாக (Victim Blaming) எஸ்.வி.சேகர் பேசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பலமுறை பெண்களுக்கு எதிரான சர்ச்சைக் கருத்துகளைக் கூறி நீதிமன்றப் படிகளேறிய எஸ்.வி.சேகர், மீண்டும் ஒருமுறை இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சை வெளிப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலிப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சிற்குச் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்துப் பரபரப்புகளுக்கு இடையே, ஒரு பெண்ணின் கண்ணியம் குறித்த இதுபோன்ற பேச்சுகள் சமூகத்தில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குவதாகப் பெண்ணியவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். எஸ்.வி.சேகர் தனது கருத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.




