பண்ணைப்புரத்தில் இருந்து வெறும் காலில் புறப்பட்ட இசைஞானி கடந்த மார்ச் எட்டாம் தேதி அப்பலோ அரங்கில், உலகத்தில் மிக முக்கிய ராயல் பில்ஹாமோனிக் இசைக் குழுவை கொண்டு தனது சிம்பொனியான வேலியண்ட்டை வெற்றிகரமாக அரங்கேற்று இருந்தார். இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிம்பொனி இசையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவரை வந்து அடைந்து இருக்கிறது. இது அங்கு வந்தவர்களுக்கு பெரும் விருந்தாகவும், இது குறித்த வீடியோக்களும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றது.
இன்று நிகழ்ச்சி முடித்து சென்னை திரும்பியுள்ள இளையராஜா செய்தியாளர்களை மிக உற்சாகத்துடன் சந்தித்துள்ளார். இவரை விமான நிலையத்தில் வரவேற்க பல அரசியல் தலைவர்களும், திரை உலகினரும் திரண்டு வந்து வரவேற்றுள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் பின் பேசிய அவர், அனைவரின் ஆசியும் இணைந்து தான் தனது சிம்பொனி இசையை மிக வெற்றிகரமாக நிகழ்த்தப்பட காரணம் என்று கூறியிருந்தார்.
மேலும், தமிழக அரசு சார்பில் தனக்கு மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சி அளிக்கிறது. தனது சிம்பொனி நிகழ்ச்சியை யாரும் டவுன்லோட் செய்து கேட்க வேண்டாம். நான் அதை நேரில் நடத்த முடிவு எடுத்து உள்ளேன். தமிழர்களே இல்லாத நாடுகளில் கூட சிம்பொனி ஒலிக்க இருக்கையில், நம் நாட்டில் அது ஒலிக்க வில்லை என்றால் எவ்வாறு என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே, சிம்பொனி நிகழ்ச்சியை 13 நாடுகளில் ஒலிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எனக்கு 82 வயதாகிவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். நீங்கள் நினைக்க முடியாத ஆள் நான்.
இனிமேல் தான் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மேலும் பண்ணைப்புரத்தில் இருந்து வெறும் காலில் தொடங்கிய என் பயணம், சிம்பொனி நிகழ்ச்சியில் வெற்றியடைந்து மீண்டும் வெறுங்காலாக உங்கள் முன் நிற்கும் என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, இளைஞர்கள் அவரவர் துறையில் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.