வரலாற்றில் முதல்முறை டெல்லி வந்தடைந்தார் தாலிபான் தூதர் இந்தியாவுடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்
புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, இந்தியாவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான உறவில் ஒரு மிகப்பெரிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தாலிபான் அரசால் நியமிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ தூதரக அதிகாரி டெல்லி வந்தடைந்துள்ளார்.
தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான முஃப்தி நூர் அகமது நூர் (Mufti Noor Ahmad Noor) என்பவர் தான் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இவர் டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் ‘Charge d’Affaires’ (தூதரகப் பொறுப்பாளர்) ஆகப் பொறுப்பேற்க உள்ளார்.
கடந்த 2025 அக்டோபரில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி டெல்லி வந்திருந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவின் அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
-
தூதரகக் கொடி: தற்போது டெல்லி தூதரகத்தில் பழைய ஆப்கான் அரசின் (மூவர்ண கொடி) கொடியே பறக்கிறது. புதிய அதிகாரி வந்தாலும், உடனடியாகக் கொடி மாற்றப்படாது என்றும், பழைய பணியாளர்களே தொடருவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அங்கீகாரம்: தாலிபான் தூதரை ஏற்பதன் மூலம் இந்தியா அந்த அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது ஒரு ‘தொழில்நுட்ப ரீதியான’ மற்றும் ‘மக்களுக்கான சேவையை’ மையப்படுத்திய நடவடிக்கை மட்டுமே என இந்தியா கருதுகிறது.
-
மும்பை தூதரகம்: ஏற்கனவே மும்பையில் உள்ள ஆப்கான் தூதரகத்தில் இக்ராமுதீன் கமில் என்ற தாலிபான் அதிகாரி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி வழங்கவும், தீவிரவாதப் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும் ஒரு நேரடித் தொடர்பு அவசியம் என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.


