சரக்கு வண்டி ஓடாது.. பார்களும் திறக்காது!! தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு!!

tasmac-shops-closed-4-days-tamil-nadu-election-2026-dry-day-dates-april-21-may-4

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை 4 நாட்கள் மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு நாட்களான ஏப்ரல் 21 மற்றும் 22, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23 மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் (வாக்கு எண்ணிக்கை) மே 4-ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களும் தமிழகத்தில் ‘மது இல்லாத நாட்களாக’ (Dry Days) அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, தனியார் ஹோட்டல்கள் மற்றும் கிளப்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் (Bars) கட்டாயம் மூடப்பட வேண்டும். இந்த நாட்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மது தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில் இருந்து மதுபானங்களை வாகனங்கள் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“விதிமுறைகளை மீறிச் செயல்படும் மதுக்கூடங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்” எனத் தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம், அதிமுக-விசிக மோதல் என அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மது விற்பனைத் தடை குறித்த இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக மது விநியோகத்தைத் தடுத்து, வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பதைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram