விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயிலில் பாலாலயம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே ஒருமுறை பாலாலயம் நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் மீண்டும் பாலாலயம் நடத்துவது தங்களின் உணர்வுகளை அவமதிப்பது போலிருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
சட்டவிரோதமாக சிலை உடைக்கப்பட்டதற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கோயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக, சிலர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் மற்றும் ஊர் பெரியவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.