சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான எஸ்.எஸ். தமன், தமிழ் சினிமாவில் தனக்கு உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும், தெலுங்குத் திரையுலகில் இருக்கும் சூழல் குறித்தும் பகிரங்கமாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தமன், தமிழ் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கில் எளிதில் வாய்ப்புப் பெறுவதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்:
தமன் கருத்து: “எனக்குத் தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால், தெலுங்கில் அனிருத்துக்கு மிக எளிதாகப் பட வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்குக் காரணம், தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை (Closeness) தெலுங்குத் திரையுலகில் இல்லை. தெலுங்கில் பிற மொழி இசையமைப்பாளர்களுக்கு அதிக இடமளிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்குத் திரையுலகில் பணிபுரியும் நோக்கம் குறித்தும் தமன் வெளிப்படையாகப் பேசினார்.
“வெளி மாநிலங்களில் இருந்து தெலுங்குச் சினிமாவுக்கு வருபவர்கள், அங்குள்ள ரசிகர்கள் மீதோ அல்லது அந்தத் திரையுலகின் மீதோ விருப்பத்தால் வேலை செய்யவில்லை. அவர்கள் அங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள், பணத்திற்காகத்தான் அங்கு வேலை செய்கிறார்கள்,” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ் திரையுலகில் நிலவும் ஒற்றுமை காரணமாக உள்ளூர் கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தமனின் இந்தப் பேச்சு திரையுலகில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


