நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்குப் பிறகு தன்னை குறிவைத்து திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி, முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக விஜய் பேசிய கருத்துக்கு எதிராக ஜூலி வெளியிட்ட வீடியோவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து தன்னை விமர்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக யூடியூப் சேனல்கள் மூலம் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவதூறு வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை சிறுநீரக மோசடி விவகாரத்துடன் தொடர்புபடுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும், முன்பு செவிலியராக பணியாற்றிய காலத்தை சுட்டிக்காட்டி பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் ஜூலி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த அவர், எந்தவித சட்டவிரோத செயல்களிலும் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் 8 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு அவதூறு பரப்புபவர்கள் மீது எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலான கவனம் இருந்து வருகிறது.


