விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தவெக, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கும் தமிழக வெற்றிக் கழகம், மாநில அரசியலில் தற்போது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் விஜய் நேரடியாகவே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இது சாதாரண வேட்பாளர் அறிமுகம் அல்ல, மக்களை காப்பவர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எனக் குறிப்பிட்டார். மேலும், தேர்வு செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றும், அரசியல் அனுபவத்தை வைத்து சுரண்டுபவர்கள் அல்ல என்றும் வலியுறுத்தினார்.
இந்த தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் அவை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் ஆகும். மேலும் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் மக்களோடு இணைந்து செயல்படக்கூடியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த தேர்தல் இருமுனைப் போட்டியாக இருக்கும் என கூறிய விஜய், வாக்காளர்கள் சிதறாமல் ஒருமித்தமாக வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். போதை இல்லாத தமிழகம் உருவாக்குவது தமது முக்கிய இலக்கு என்றும் அவர் அறிவித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் தமிழக வெற்றிக் கழகமும் முழு அளவில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது.




