மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளைஞரான டேனியல் ஜாக்சன், தனது 50 ஏக்கர் நிலப்பரப்பை ‘வெரட்டிஸ்’ (Vergitis) என்ற தனி நாடாக அறிவித்து, அதன் அதிபராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்னுக்கு அருகில் உள்ள இந்த 50 ஏக்கர் நிலப்பரப்பில், டேனியல் தனது புதிய நாட்டை நிறுவியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “எங்கள் நோக்கம் சுதந்திரம் மற்றும் சுயாட்சி. உலக நாடுகளின் எந்தவொரு அரசும் எங்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
வெரட்டிஸ் நாடு தனக்கென தனியான அரசமைப்பு, சட்டம், கொடி, தேசிய கீதம் மற்றும் கடவுச்சீட்டை (Passport) உருவாக்கியுள்ளது. தற்போது வரை ஐந்து பேரை குடிமக்களாகக் கொண்டுள்ள இந்த நாடு, எதிர்காலத்தில் மேலும் பலரை இணைக்க திட்டமிட்டுள்ளது. வெரட்டிஸ் தனது சொந்தக் கரன்சியையும் (currency) அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் டேனியலின் இந்த முயற்சிக்கு ஆதரவும், விமர்சனமும் ஒருசேர கிடைத்து வருகின்றன. சிலர் இதை ஒரு பொழுதுபோக்காகப் பார்க்கிறார்கள், மற்றவர்கள் இதை அரசியல்ரீதியான ஒரு புரட்சியாகப் பாராட்டுகிறார்கள். இருப்பினும், ஆஸ்திரேலிய அரசு வெரட்டிஸை ஒரு தனி நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.
டேனியலின் இந்த முயற்சி, உலகெங்கிலும் உள்ள இளம் தலைமுறையினருக்கு புதுமையான சிந்தனைகளையும், உலக நாடுகளின் அரசியல் கட்டமைப்புகளுக்கு அப்பாற்பட்ட புதிய கருத்துகளையும் உருவாக்கியுள்ளது.