தென்காசி: மதுரையில் இருந்து வந்த பேருந்தின் ஆக்சில் கடையநல்லூர் அருகே உடைந்ததால் பின் சக்கரங்கள் பேரிங் உடன் நடுரோட்டில் ஓடின. நிலைகுலைந்த பேருந்து சாலையில் உரசியப்படி நின்றது. மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் மதுரை கோட்ட அரசு பேருந்து நேற்று காலை தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே இடைக்கால் என்னும் பகுதியில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. சங்கரன் 55 வயது இவர் பேருந்து ஓட்டி வந்தார்.
இடைகால் அருகே பேருந்து வந்த போது திடீரென பேருந்து சக்கரங்களை இணைக்கும் சென்ட்ரல் ஆக்சில் உடைந்தது. இதில் இரண்டு பின் சக்கரங்கள் பேரிங் உடன் பஸ்ஸை விட்டு கழன்று ஓடின. பின்புற டயர் இல்லாமல் சாலையில் உரசியபடி சென்று நின்றது பேருந்து. அந்தப் பேருந்தில் 80 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். இதில் மூன்று மாணவர்களுக்கு காயம் அடைந்துள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். பேருந்தினை வேறு வாகனங்கள் பின் தொடராததால் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுத்துக்குள்ளாவது என விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே இடைக்கால் பகுதியில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியதால் அரசு பேருந்து வயலுக்குள் சென்று நின்றது. அதில் பயணித்த பெண் பயணி ஒருவர் பலியான நிலையில் மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர்.