செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள் இந்தக் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த விடுதியின் கார் ஓட்டுநராக பணியாற்றிய பழனி என்பவர், 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த தகவலை பாதிக்கப்பட்ட சிறுமிகள் பலமுறை காப்பக உரிமையாளரான அருள்தாஸிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல அலுவலர்கள் காப்பகத்தில் ஆய்வை மேற்கொண்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேரடியாக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், குழந்தை நல அலுவலர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முறையான புகார் மனுவை சமர்ப்பித்தார். இதன் பேரில் போலீசார் அந்த காப்பகத்துக்கு விரைந்து சென்று பழனியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமிகள் அளித்த புகாரை மறைத்ததாகக் கூறி காப்பக உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா இருவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையின் போது அருள்தாஸுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியா மற்றும் பழனியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துடன், காப்பகத்தில் உள்ள மற்ற சிறுமிகளும் அதே வகையான தொல்லைக்கு உள்ளானார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் அனைவருக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்பட்ட அந்த விடுதியில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.