நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தையே நடுங்க வைக்கிறது. 50 வயது கட்டிடத் தொழிலாளி, குடும்பத்துடன் ஊட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் மனைவிக்கு 45 வயதாகிறது. வேலைவாய்ப்பு குறைபாட்டால் கணவன் கட்டிடத் தொழிலிலும், மனைவி ஒரு காட்டேஜில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 2 மகன்களும் பள்ளியில் படிக்கிறார்கள். மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. இளைய மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலை இருப்பதால், தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நேரங்களில் மூத்த மகளே தங்கையை கவனிக்கின்றார். இதற்காக அவள் பள்ளிப் படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டார் என்பது வேதனை.
சமீபமாகவே மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கணவன் தாம்பத்தியத்துக்கு அழைக்கும்போது தொடர்ந்து மறுத்துவந்தார். அந்த கோபத்தையும் தேவையற்ற ஆசையையும் தீர்க்க, அந்த கொடூரத் தொழிலாளி, தன் மகளையே பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார். அப்பாவின் அசிங்கமான வார்த்தைகள் கேட்டு அதிர்ந்த சிறுமி, கதறி அழுகையுடன் அம்மாவிடம் இதைப் பகிர்ந்துள்ளார். இதை கேட்ட தாய் உடனே ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து, போக்சோ சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே சம்பவம் போலவே, குன்னூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி, குடிபோதையில் அடிக்கடி மனைவியுடன் வன்முறை நடத்தியதால், மனம் உடைந்த மனைவி வீட்டை விட்டு பிள்ளைகளை விட்டுவிட்டு சென்றார். ‘குழந்தைகள் இருந்தால் கணவர் திருந்துவார்’ என்ற நம்பிக்கை துரோகமாகி விட்டது. வீட்டில் இருந்த மூத்த மகள் பள்ளிக்கு செல்லாத நாளில், குடிபோதையில் வந்த அந்த அரக்கன், தன் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தான். வெளியில் சொன்னால், தன் இளைய சகோதரியை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால், சிறுமி பலமுறை பாலியல் கொடுமையை அடக்கிக் கொண்டார். இறுதியில் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அந்த கொடுமை வெளியில் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கம், குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளார். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தீர்ப்புகள், இவ்வாறான அராஜகங்களை செய்வோருக்கு பாடமாக அமைய வேண்டும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


