குறைந்து வரும் தமிழ் படங்களின் சுவாரசியம்!! அதிக வயதுடைய ஹீரோக்கள் தான் காரணமா??

தமிழ் சினிமா, கடந்த சில ஆண்டுகளாக மாற்றத்தின் போக்கில் பயணித்து வருகிறது. ‘மாஸ் ஹீரோ’ கலாச்சாரம் உச்சத்தை தொட, காதல், குடும்ப உணர்வுப்பூர்வமான படங்களுக்கு இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சலிப்புடன் திரையரங்குகளை விட்டு வெளியேறும் சூழல் தொடர்கிறது.

புதிய தலைமுறை ரசிகர்களை கவரும் படங்களை உருவாக்க தமிழ் சினிமா தவிக்கிறது. முக்கியமாக, முன்னணி ஹீரோக்களின் வயது உயர் நிலையை எட்டியுள்ளது. ரஜினிகாந்த் (75), கமல்ஹாசன் (71), விக்ரம் (60), அஜித் (54), விஜய் (50) என முன்னணியில் இருப்போர் பெரும்பாலும் நடிக்க விரும்புவது ஆக்ஷன் மற்றும் கற்பனைக் கதைகளில் தான். காதல் கதைகள், எளிய வாழ்க்கை சம்பந்தப்பட்ட திரைக்கதைகள் அவர்களின் வயதிற்கு ஏற்றதாக இல்லாததால், அவை புறக்கணிக்கப்படுகின்றன.

வயதில் இளம் ஹீரோக்களும் இதே பாதையில் பயணிக்கின்றனர். அவர்கள் அதிக சம்பளத்தை நோக்கி, பெரிய ஹீரோக்களின் சாயலை பின்பற்றி, மசாலா கலந்த ஆக்ஷன் படங்களை தேர்வு செய்கிறார்கள். பிரதீப் ரங்கநாதன், இரு ஹிட் படங்களுக்குப் பிறகு கூட தனது அடுத்த படத்தை ஆக்ஷனாகவே உருவாக்க முயற்சிக்கிறார் என்பது சினிமா தொழில்நுட்ப வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ரசிகர்கள் இனி உணர்வுப்பூர்வமான, தரமான கதைகளை எதிர்நோக்குகின்றனர். ஒரே மாதிரியான டான், கேங்ஸ்டர், ஹீரோயிசம் படங்கள் மீதான ஆர்வம் குறைந்துவருகிறது. இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட வசூலில் தோல்வியடைந்து வருகின்றன. தமிழில் குறைவாகவே உருவாகும் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள், மலையாள சினிமாவில் அதிகரித்து வருகின்றன. ஹீரோக்களின் மார்க்கெட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், திரைக்கதைகளின் தரத்தைக் கொண்டே இளம் நடிகர்களுடன் தரமான படங்களை உருவாக்கும் முயற்சிகள் மலையாள திரைதுறையில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. தமிழ் சினிமா, தன்னையே மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளது. ரசிகர்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள், புதிய கதைக்களங்கள், மற்றும் இளம் நடிகர்களுக்கான வாய்ப்புகள் பெருக வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது. இல்லையெனில், தமிழ் சினிமா மிக விரைவில் மற்ற மொழித் திரைப்படங்களின் அடையாளத்திற்குள் மறைந்து விடும் அபாயம் உள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram