கடலூர்: சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜுனன் என்பவர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் (அபிதா) ஆகியோர் உள்ளனர். அபிதாவிற்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளைஞனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு தந்தை அர்ஜுனன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அபிதா அந்த இளைஞருடன் பேசி வந்துள்ளார்.
அபிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை தொடர்ந்து அபிதாவிற்கு பல்வேறு வரன்களை பார்க்க ஆரம்பித்தார். அபிதா திருமண வரன்களை புறக்கணித்து வந்துள்ளார். இதனால் மகளுக்கும் தந்தைக்கும் இடையே சண்டைகள் வருவது வழக்கமாக இருந்துள்ளது. வழக்கம் போல் இன்றும் மகளுடன் சண்டை நடந்துள்ளது .
ஒரு கட்டத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மகள் என்று பாராமல் அபிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். கொலை சம்பவம் குறித்து புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அபிதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தந்தையே புத்தூர் காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் கொலைகார காரணத்தை விசாரித்தனர். பெற்ற தந்தையே திருமணம் செய்யாமல் புறக்கணித்து இருந்த மகளை கழுத்தறுத்து கொலை செய்து தானே சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.