கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி அருகில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கீழ் அழிஞ்சிப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் பிரியதர்ஷினி. இவருக்கு 7 வயது ஆகும் நிலையில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி காலை எப்போதும் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். சக மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்கு அருகே உள்ள கடையில் ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பின் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டம் நடக்க இருந்த நிலையில் பிரியதர்ஷினி பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பிரியதர்ஷினி பள்ளி வளாகத்தில் உள்ள வராண்டாவில் படுக்க வைத்துவிட்டு இரு சக்கர வாகனம் வைத்திருப்பவரை அழைத்து வர சென்றுள்ளார் தலைமை ஆசிரியர் ரேவதி. தலைமை ஆசிரியரிடம் இருசக்கர வாகனம் இல்லாததால் அவ்வழியே சென்றவரிடம் சென்று சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.
அதே கிராமத்தை சேர்ந்த நபரை பிரியதர்ஷினியை அவரது வீட்டில் விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்திருக்கிறார். நேற்று முன் தினம் காலையில் பிரியதர்ஷினியை பெரிய காட்டு பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார் பிரியதர்ஷினயின் தாயார். சிறுமியின் நாடி துடிப்பு குறைவாக இருப்பதால் மேற்படி சிகிச்சைக்கு புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று வரை கோமாவில் இருந்துள்ளார் சிறுமி.
நேற்று மதியம் பிரியதர்ஷினி உயிர் பரிதாபமாக பிரிந்தது. இதற்காக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், மாணவியின் நிலையை அலட்சியமாக எடுத்துக் கொண்ட தலைமை ஆசிரியர் ரேவதி அவர்களை நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.