சென்னை: மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிக்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றது விவசாயிகள் இடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதன்படி வேளாண் துறை அமைச்சர் மற்றும் தோட்ட கலைத்துறை இயக்குனர் ஆகியோர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மாம்பழங்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மாம்பழ விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு மாம்பழத்தின் விலை ரூ 150 க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது 40 ரூபாய்க்கு வாங்குவதற்கு கூட ஆள் இல்லாமல் மாம்பழங்கள் விலை இல்லாமல் இருக்கிறது. மேலும், சலுகையாக மூன்று கிலோ 100 ரூபாய் என விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழ கூழ் தயாரிக்க பயன்படுத்தும் மாம்பழங்களும் விலை இல்லாமல் இருக்கிறது.
கடந்த ஆண்டு 20 முதல் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 4 ரூபாய் என ஆலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் மாம்பழக் கூழ் ஆலைகள் உற்பத்தி தொடங்கும் நிலையில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
மேலும், வரும் 29ஆம் தேதி சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கர்நாடக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல தமிழக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
அவரது அறிக்கையில் மாம்பழ விவசாயிகள் விலை சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 20ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உண்ணாவிரத போராட்டமும், திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது குறித்த விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர்களின் குரலாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசை கண்டித்து மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 30ம தேதி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.