விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக் கோட்டையை, யுனெஸ்கோ, மராத்திய ராணுவ நிலப்பரப்பில் உள்ள கோட்டைகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மராத்திய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 12 கோட்டைகள் மரபு சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ மரபு சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. செஞ்சிக் கோட்டை, பல்லவர் வழி வந்த காடவ மன்னன் மற்றும் இடையர் குலத்தைச் சேர்ந்த அனந்தக்கோன் ஆகியோரால் 7ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், மராத்தியர் வரலாறு 17ம் நூற்றாண்டில் தொடங்கியது என்பது பலரும் அறிந்த உண்மை. இத்தகைய ஒரு தமிழ் கட்டிடக் கலையை கொண்ட கோட்டை, மராத்திய வரலாற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது நியாயமற்றதாக உள்ளது என பலரும் கருத்து தெரிவிக்கிறனர்.
1677ஆம் ஆண்டு சிவாஜி, பிஜப்பூர் சுல்தானை வீழ்த்தியபோது செஞ்சிக் கோட்டை மராத்தியர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. ஆனால் செஞ்சி கோட்டை ஒரு குறுகிய கால கட்டம் மட்டுமே அவர்களிடம் இருந்தது. பின்னர் 1698ல் அந்த கோட்டை முகலாயர் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இதைத்தவிர, மராத்தியர்களுக்கும் செஞ்சிக்கோட்டைக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை. இந்த கோட்டையின் வரலாறும், அதன் சிறப்பும் தமிழரின் கலாச்சாரம், கட்டிடக்கலை, அரசியல் பெருமையை பிரதிபலிக்கின்றன. ஆனால், தற்போது அந்தக் கோட்டையை மராத்தியர்களின் அடையாளமாக மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இது தமிழர்களின் வரலாற்றை புறக்கணிப்பது போல உள்ளது என பலரும் கூறுகின்றனர். நியாயமாக, அது தமிழர்களின் வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். பாஜக கட்சி தமிழக வரலாறு மற்றும் அடையாளங்களை நீக்க நினைக்கிறது. கீழடி போன்ற தொல்லியல் இடங்களிலும் இதே போக்கு தொடர்ந்து இருப்பதாகவும் பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.