ஹைதராபாத்: நேற்றைய கோழிக்கறி இன்றைக்கு உயிரைப் பறிக்கும் என்ற அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. சமைத்து ஃபிரிட்ஜில் வைத்த பழைய கோழிக்கறியைச் சூடுபடுத்திச் சாப்பிட்ட 46 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சமைக்கப்பட்ட கோழிக்கறி குழம்பை, ஃபிரிட்ஜில் வைத்து பாதுகாத்துள்ளனர். நேற்று காலை, அந்தக் கோழிக்கறியை மீண்டும் சூடுபடுத்தி குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுள்ளனர்.
சற்று நேரத்தில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 46 வயதுடைய அந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில் சிலர் குழந்தைகள் என்பதால், பெற்றோர்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், பழைய கோழிக்கறியை முறையாகப் பாதுகாக்காமல், மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டதால் உணவு நஞ்சானதாகத் தெரியவந்துள்ளது. கோழி இறைச்சி போன்ற பொருட்கள் சமைக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட வெப்பநிலையில், சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகி நஞ்சாக மாறக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க, சமைத்த உணவுகளை முறையாகப் பாதுகாப்பது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.