தர்மபுரி: தர்மபுரி குடிநீர் நிலையை பற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒடிசால போய் கல்லு உடைக்கிறவன் தர்மபுரிக்காரன். குவாரியில் அடிமையாக இருக்கிறான். ராமேஸ்வரத்துக்கு போனா ஐயான்னு பேசுறான் சிரிச்சு பேசினா பல்லு மஞ்சளா இருக்கு எந்த ஊருன்னு கேட்டா தர்மபுரினு சொல்றான்.
ஏன்னு கேட்டா வேலை இல்லை அதற்கு தகுந்த படிப்பு இல்லை அதனால தான் கொத்தனார் வேலை பண்ணிட்டு இருக்கான் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் அன்புமணி பேசிய வீடியோ கடந்த இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்காகி வருகிறது. தர்மபுரியில் உள்ள குடிநீரை நிலையை சுட்டிக்காட்டி ப்ளுரைடு தன்மை அதிகமாக உள்ளதால் பற்கள் மஞ்சளாக இருக்க காரணம் என கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஒரு லிட்டர் குடிநீரில் 1.5 மில்லி கிராம் புளோரைடு மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தர்மபுரி வட்டாரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 12.5 மில்லி கிராம் அளவிற்கு ப்ளுரைடு அதிக அளவில் காணப்படுகிறது. அளவுக்கு அதிகமான ஃப்ளோரைடுகள் இருப்பதால் பல்வேறு பாதிப்புகளை தருமபுரி மக்கள் சந்தித்து வருகின்றன. மழைக்காலங்களில் இந்த நிலையை சமாளித்துக் கொள்ள முடியும்.
ஆனால், கோடை காலங்களில் வறட்சி நிலவுவதால் கிணறுகள் மற்றும் ஏரிகளை நம்பி இருப்பதால் அதில் அதிகப்படியான ப்ளூரைடு காணப்படுகிறது. இந்த ப்ளூரைடு பிரச்சனையால் 30 சதவீத குழந்தைகள் மற்றும் 40% இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு பாய்வதன் மூலம் முதல் கட்ட கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் நோக்கம் ப்ளூ ரைட் பிரச்சனையை தீர்க்கவே. 3 நகராட்சிகளில் உள்ள 17 ஊராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். காவிரி ஆறு எல்லை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பலன் கிடைத்து வந்தாலும் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சில பகுதிகளில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உடன் நிலத்தடி நீரும் கலந்து வருவதாக புகார் அளித்துள்ளனர் பொதுமக்கள். தண்ணீர் கலப்பு ஏற்படுகின்ற பகுதிகளில் குடிநீர் திட்டத்தின் மூலம் முழுமையான பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அன்புமணி.
மத்திய மாவட்ட பகுதிகள் மற்றும் கடைமடை மாவட்ட பகுதிகளில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் சேராததால் நிலத்தடி நீரையே பயன்படுத்தி வருகின்றனர். சில கிராமங்களில் திருமணத்திற்கு பெண் எடுத்தாலும் பிறக்கும் குழந்தையின் பற்கள் மஞ்சளாக இருக்கின்றன என்ற பேச்சும் இருக்கிறது.