திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் இளங்கோவன் மற்றும் சரிதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் உயிரிழந்துள்ளார்.
கணவனை இழந்த சரிதா தனது குழந்தைகளுடன் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். ஓட்டு வீடு பழுதடைந்த நிலையில் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சரிதாவின் கடைசி மகன் வெற்றிமாறன் ஆம்பூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில் எப்போதும் போல் நேற்று பள்ளியை முடித்து வீட்டிற்கு வந்திருக்கிறார் வெற்றிமாறன். அப்போது வீட்டு சுவரில் ஏற்பட்டிருந்த விரிசல் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வெற்றிமாறன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவன் வெற்றிமாறனின் உடலை மீட்டனர். உடனே ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் எதிர்பாராத நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.