தக்காளி வாங்குவதற்கே ஆள் இல்லை!! தர்மபுரி கிருஷ்ணகிரி குறித்து அன்புமணி கோரிக்கை!!

There is no one to buy tomatoes

தக்காளி விலை மிகவும் குறைவாக உள்ளது குறித்து கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்  அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருப்பதால் சந்தைகளில் அதன் கொள்முதல் விலை கிலோ ரூ.3க்கும் குறைவாக சரிந்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருவது வேதனையளிக்கிறது. தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.10 செலவாகிறது. தக்காளி அறுவடை, போக்குவரத்து செலவு ஆகியவற்றுடன் லாபமும் சேர்த்து குறைந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்டால் தான் உழவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், தக்காளி நல்ல விளைச்சல் ஈட்டும் போது கிலோ ரூ.3க்கு கூட வாங்கப்படுவதில்லை. அதே நேரத்தில், விளைச்சல் இல்லாத போது, வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்படும் போது, அதில் பெருந்தொகையை வணிகர்களும், இடைத்தரகர்களும் தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர உழவர்களுக்கு பெரிய தொகை கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் உழவர்களுக்கு சற்று அதிக விலை கிடைத்தாலும் கூட அவர்கள் செய்த செலவையும், விளைச்சலையும் ஒப்பிட்டு பார்த்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்காது.

ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை படு மோசமான வீழ்ச்சியையும், எட்ட முடியாத உச்சத்தையும் தொடுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வுகாய்கறிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்குவது தான். கேரளத்தில் தக்காளி, வாழை, பாகற்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அம்மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அந்த காய்கறிகளை பயிரிடுவோருக்கு அனைத்து செலவுகளும் போக 20 சதவீதம் லாபம் கிடைக்க வகைசெய்யப்பட்டிருக்கிறது. கேரளம் செய்ததை தமிழகமும் செய்திருந்தால் விவசாயிகளுக்கு விளைபொருட்களை குப்பையில் கொட்டவேண்டியிருந்திருக்காது. அத்துடன்,பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

கேரளத்தில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்ட போது, அதே முறையை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறிகளுக்கு கொள்முதல் விலை நிர்ணயிப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதி என்னவானது? இதன் மூலம் உழவர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்து வருகிறது.

உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இனியும் காலம் கடத்தாமல் வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தையும், விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்வதற்கு விளைபொருள் கொள்முதல் வாரியத்தையும் அமைக்க வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருட்கள் அதிகமாக விளையும் காலங்களில் அவற்றை சேமித்து வைப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகளை அமைக்கவும், தக்காளி சாறு தயாரிப்பதற்கான நடமாடும் ஆலைகளையும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை காக்க வேண்டும்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram