திருவள்ளூர் அருகே சமீபத்தில் நடந்த சரக்கு ரயில் விபத்து மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த விபத்தில் டீசல் டேங்கர் ரயிலின் வண்டிகள் தடம்புரண்டதால் பழைய தண்டவாளம் பல இடங்களில் தீவிர சேதத்தை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதையை முழுமையாக சீரமைக்கும் பணி ரயில்வே துறையால் தொடங்கப்பட்டது. இதற்காக 400க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். அதிக வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல், சுமார் 48 மணி நேரமாக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிய தண்டவாளம் அமைக்கும் பணி 80% அளவில் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வேலைகள் இன்னும் மூன்று மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய தண்டவாளம் அமைந்தவுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில் சேவை மீண்டும் வழக்கமாக இயக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக கடந்த சில நாட்களாக அந்த வழித் தொடரில் பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்பட்டன. பல்வேறு பயணிகள் ரயில்களின் நேர அட்டவணையும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக சீரமைத்து ரயில்கள் தாமதமின்றி இயக்கப்படுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த பணி திட்டமிட்டபடி முடிந்துவிட்டால், இன்று நள்ளிரவுக்கு முன்னர் ரயில் இயக்கம் மீண்டும் வழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மற்றும் பயணிகள் விரைவில் எந்தவிதமான தடையுமின்றி பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.