சென்னையின் புறநகர் புழல் அருகே இன்று ஒரு வீடு மூன்று உயிர்களின் சுமையால் சோகத்தில் மூழ்கியுள்ளது. கதிர்வேடு பிரிட்டானியா நகரில் வசித்து வந்த செல்வராஜ் (57) தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்தார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் வேலை காரணமாக இப்பகுதிக்கு குடிபெயர்ந்து வந்தது. செல்வராஜ் டிரான்ஸ்போர்ட் துறையில் வேலை செய்து தனது மனைவி மாலா மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு வாழ்வாதாரம் செய்து வந்தார். மகள் இதயா, மகன் சுமன் ராஜ் (15), கோகுல்ராஜ் (13) இவர்கள் செல்வராஜின் வாழ்க்கையின் நம்பிக்கைகள். சுமன் ராஜ் 10ஆம் வகுப்பு, கோகுல்ராஜ் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். பிள்ளைகள் நல்ல முறையில் படித்து உயர்ந்த இடத்திற்கு சென்று வளர வேண்டும் என்ற ஆசையே செல்வராஜின் பெரும் கனவு. ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வராஜ் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக தெரிகிறது.
பல இடங்களில் கடன் வாங்கி குடும்ப செலவுகளை சமாளித்ததால் அவருக்கு அதிகபட்ச மன அழுத்தம் ஏற்பட்டது. கடந்த இரவு, இரண்டு மகன்களையும் அருகில் வைத்துக்கொண்டு தூங்கச் சென்றார். மாலா தனது மகளுடன் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த இரவு மூவருக்கும் வாழ்க்கையின் கடைசி இரவாக மாறும் என்று யாரும் நினைக்கவில்லை. அடுத்த நாள் காலை பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரத்தில் எழவில்லை. கதவைத் தட்டியும் திறக்காததால் மாலாவுக்கு சந்தேகம் எழுந்தது. பக்கத்து வீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது செல்வராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தனர். விஷம் அருந்தி மூவரும் உயிரை இழந்துவிட்டனர் என்பது தெரிய வந்தது.
மாலா மற்றும் அவரது மகள் இதயா அதிர்ச்சியில் கதறி அழுதனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராஜ் தன்னை மட்டும் அல்லாமல் இரண்டு மகன்களையும் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.