மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியாளரும், துனீசியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான ஒன்ஸ் ஜபேர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி, ஓய்வு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். உடல்நலக் குறைபாடு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த ஒன்ஸ் ஜபேர், நடப்பு ஆண்டில் நடந்த மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் மூன்றாவது சுற்றைத் தாண்டவில்லை. விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றிலேயே மூச்சுத் திணறல் காரணமாக வெளியேறினார். இது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக, நான் காயங்களுடனும், பல சவால்களுடனும் போராடி மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால், சில காலமாக டென்னிஸ் மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை. டென்னிஸ் ஒரு அழகான விளையாட்டு. ஆனால் இப்போது, நான் ஒரு படி பின்வாங்கி, முதலில் எனக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன். மூச்சு விடவும், குணமாகவும், வெறுமனே வாழும் மகிழ்ச்சியை மீண்டும் கண்டறியவும் இது எனக்கு உதவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகின் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்திருந்த ஒன்ஸ் ஜபேர், காயங்கள் காரணமாக தற்போது 71வது இடத்திற்கு சரிந்துள்ளார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், இந்த ஆண்டு தோள்பட்டை காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை. ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒன்ஸ் ஜபேரின் இந்த திடீர் ஓய்வு, டென்னிஸ் உலகிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் டென்னிஸ் களத்திற்குத் திரும்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.