தமிழகக் கல்வித் துறையில் நிலவி வந்த நீண்ட காலப் போராட்டத்திற்கு இன்று ஒரு விடிவு கிடைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த தேர்வர்களுக்குத் தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வில், இனி இந்தப் பிரிவினர் வெறும் 60 மதிப்பெண்கள் எடுத்தாலே ஆசிரியர் பணிக்குத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
இதுவரை 55 சதவீதமாக இருந்த இந்த வரம்பு, தற்போது அதிரடியாகக் குறைக்கப்பட்டிருப்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதியை நிலைநாட்டும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அரசாணை (GO) வெளியான செய்தி, ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. கடந்த காலங்களில் கடினமான வினாத்தாள்கள் காரணமாகப் பல இடஒதுக்கீடு பிரிவினர் குறைந்த மதிப்பெண்களில் வாய்ப்புகளை இழந்தனர்.
இதனால் அரசுப் பள்ளிகளில் பல பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அந்த இடங்களை விரைவாக நிரப்ப உதவும்.
கல்வியாளர்கள் மத்தியில் இந்த முடிவுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், இது மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்குமா என்கிற கேள்வியும் ஒரு பக்கம் எழாமல் இல்லை. இருப்பினும், அரசுத் தரப்பில், “வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு முன்னுரிமை அளிப்பதே உண்மையான சமூக நீதி” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் குறைப்பு என்பது தற்போதைய தேர்வு முடிவுகளுக்கு மட்டுமின்றி, இனி வரும் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு. இதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தலைமுறையைச் சேர்ந்த பலரும் அரசுப் பள்ளி ஆசிரியர் எனும் கௌரவத்தைப் பெறுவது உறுதியாகியுள்ளது.


