கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஆசிரியர் தேர்வு குறித்த பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. ஆசிரியர் தேர்வு வைப்பது குறித்தே வெளியிடாமல் இருப்பது? தேர்வு வைத்து இருந்தாலும், ஆறு மாதங்களுக்கு மேல் தேர்வு விடைத்தாள் கூட வெளிப்படுத்தாமல் இருப்பது? முடிவும் அறிவிக்காமல் இருப்பது? அரசு தேர்வாணையம், நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் தேர்வு குறித்தும், தேர்வு முடிவுகள் குறித்தும் எப்பொழுது தகவல் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு உடனே பலர் காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளும் போதிய பணியாளர்கள் இல்லாததால் அதன் சேர்க்கையிலும், முன்னேற்றத்திலும் பின் தங்கி வருகின்றது.
இதில் தேர்வு குறித்து ஏன் தேர்வாணையம் இரண்டு வருடங்களாக தொய்வு காட்டி வருகின்றது என்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. தேர்வு ஆணையம் ஆனது ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும். மேலும், கடந்த ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் தேர்வு வைத்தும், அதன் விடைத்தாள் வெளியீடு குறித்து கூட தகவல் வெளிவரவில்லை. அந்த தேர்வில் எழுதியவர்கள் நிலை குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
மேலும் இதில் முதுநிலை பட்டம் படித்தவர்களுக்கு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் உரிய தேர்வு குறித்து தகவல் வெளி வரவே இல்லை. இந்நிலையில், தற்சமயம் 2025 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், தற்சமயம் வரை தேர்வுகள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. தேர்வாணையம் தொடர்ந்து டெட் தேர்வு நடத்துவது குறித்து எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்காதது ஏன்? என்றவாறு பலரும் புலம்பி வருகின்றனர். சிலருக்கு வயது வரம்பு தாண்டி விடுமோ! என்ற அச்சத்திலும் உள்ளனர்.