சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்து ஏழு நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று குஜராத் வடக்கு–கேரளா கடலோர பகுதிகளுக்கு அருகில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
குறிப்பாக தேனி, தென்காசி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
28/7/2025 முதல் 2/8/2025 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த தாரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35–36° வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.