எங்களுக்குத் தேவைனா எடுத்தே தீருவோம் கிரீன்லாந்து விவகாரத்தில் உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் உச்சகட்ட பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு முயற்சி என ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ட்ரம்ப் சொன்ன அதிரடி வரிகள்: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப்:
“விருப்பம் முக்கியமல்ல: டென்மார்க் அரசாங்கம் அல்லது கிரீன்லாந்து மக்கள் இதை விரும்புகிறார்களா இல்லையா என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்காகக் கிரீன்லாந்தை நாங்கள் கைப்பற்றியே தீருவோம்.
தேசிய சொத்து: கிரீன்லாந்து என்பது ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் எங்களிடம் தயாராக உள்ளன.” எனத் தெறிக்கவிட்டுள்ளார்.
டென்மார்க் மற்றும் நேட்டோவின் ரியாக்ஷன்:
டென்மார்க்: “இது முட்டாள்தனமானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு நாடு மற்றொரு நாட்டைப் பலவந்தமாக இணைப்பது 21-ம் நூற்றாண்டில் ஏற்கத்தக்கதல்ல” என டென்மார்க் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO): அமெரிக்கா தனது சொந்த நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கையே மிரட்டுவது அந்த ராணுவக் கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஏன் இவ்வளவு பிடிவாதம்? கிரீன்லாந்தில் புதைந்துள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான கனிம வளங்கள் மற்றும் ஆர்க்டிக் கடல் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைத் தான் ட்ரம்ப் குறிவைக்கிறார். “America First” கொள்கையின் உச்சகட்டமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது


