பெங்களூர்: மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த போது யானையை தனது செல்போனில் படம் எடுக்க ஒருவர் சென்றபோது ஏற்பட்ட விபரீதம். கர்நாடக மாநிலம் பெங்களூர், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை தாலுகாவில் உள்ள வன சரணாலயம் பந்திப்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்திற்கு அருகில் மைசூர் ஊட்டி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று மைசூர்-ஊட்டி நெடுஞ்சாலையில் உள்ள பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியின் வழியாக காட்டு யானை சாலை கடக்க இருந்தது.
அப்போது கேரளாவில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தவர் காட்டு யானையை பார்த்தவுடன் நின்றுள்ளார். பின் அருகில் சென்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். திடீரென அந்த காட்டு யானை செல்பி எடுக்க முயன்றவரை துரத்தி உள்ளது.
துரத்தும் போது கீழே விழுந்தவரை யானை கால்களால் தாக்கி விட்டு அருகில் இருந்த காட்டுக்குள் சென்றது. படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்டு யானையை தனது போனில் செல்பி எடுக்க முயற்சித்த நபரை காட்டு யானை திடீரென துரத்திய வீடியோவை வாகன ஓட்டி ஒருவர் எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.